என் பள்ளி கேட்டை திறந்த போது அது “களிர்” என்று கத்தியது. அது வியப்பினாலா அல்லது வெறுப்பினாலா என்று எனக்கு தெரியவில்லை.
கேட்டருகே இருந்த ஆல மரம் என்னை நீண்ட நாட்களாக பார்க்காததால் அதன் மனதில் இருபதை எல்லாம் என் மேல் கொட்டியது. அதன் சோகம் படிந்த முகத்தில் ஒரு புன்னகையோடு என்னை பார்த்தபோது, ஏனோ முதியோர் இல்லத்தில் இருபவர்களின் நினைவுகள் வந்தன.
நான் படித்த வகுப்பறைக்குச் செல்ல படியில் ஏறினேன். பள்ளி காலங்களில் அந்த படிகளை ஏறும் போது இருண்ட வானம் போல் முகமிருக்கும், இறங்கும் போது மழை பெய்த சுகமிருக்கும். ஆனால் இப்பொழுது அதில் ஏறிய காரணத்தால் தான் வரண்டு போன என் நெஞ்சில் நினைவின் அலை தொட்டது. படி ஏற ஏற என் வகுப்பறையை நெருங்க நெருங்க அது பெருகிக் கொண்டே வந்தன.
நான் படித்த அறைக்கதவை திறந்தேன். நினைவின் அலை பெருகி சுனாமியாய் என்னை மூழ்கடித்தது. என் வகுப்பறை எங்களை பிரிந்ததால் தாடி வளர்த்தது போல ஒட்டடை வளர்ந்திருந்தது.
சன்னல் வழியில் கொட்டிய சூரிய ஒளியில், அங்கும் இங்கும் எங்களை போலவே தூசிகள் சுற்றி திரிந்துக் கொண்டு இருந்தன.
அது மரமேஜையில் பட்டவுடன் முத்தாய் மாறிய போது தான் அழுக்கில் இருந்து ஒரு அழகு உருவாவது கண்டேன்.
அதில் அமர்ந்து பிளாக் போர்டை பார்த்தபோது எனக்கு மனிதனின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. எத்தனையோ புதிரான கணக்கு பாடங்களும், வரலாறு குறிப்புகளும் சுமந்திருக்கும்! ஆனால் இன்று அது வெறிச்சோடிக் கிடந்தது.
தரை முழுதும் தவழ்ந்துக்கொண்டிருந்த ஒளியில் சில காலடிகளைத் தேடினேன், மன்னிப்பு கூற. தோள் கொடுத்து என்னை ஊக்குவித்த குரல்களைத் தேடினேன் அதை ஒட்டுக்கேட்ட சுவர்களுக்குள்ளே.
கணக்கு தவறாய் வந்து கிழித்த பக்கங்களும், சீவிய பென்சிலின் மிச்சங்களும், வாழ்வின் கடைசி காலத்தில் தவித்த சாக்பீஸ் துகள்களும் குப்பை தொட்டியில் இருந்தன. நான் மட்டும் அதில் கோபங்களையும் விரோதங்களையும் போடவில்லையே!
வராண்டாவை பார்த்த போது நாங்கள் உணவு சாப்பிட்ட நினைவுகள் என் நாவில் எச்சில் ஊர செய்தது. பல பெர்முடா முக்கோணங்கள் இருக்கும் இடத்தில் எந்த மாணவன் தான் அவன் டிபன் பாக்ஸில் இருப்பதை அவன் உண்டிருக்கக் கூடும்?
அங்கிருந்து நாங்கள் விளையாடிய மைதானத்தை கண்டேன்.
பி.டீ மாஸ்டர் அடிக்கும் விசில், ஏதோ போருக்கு முன் அடிக்கும் சங்கொலியாகவே இருக்கும். பலமான ஒரு அணி கௌரவர்கள் போலும், பலமற்றவர்கள் பாண்டவர்கள் போலும், ஆரம்பமாகும் குருக்க்ஷேத்திர யுத்தம். பிரம்மாஸ்திரங்கள் போல கால் பந்து முன்னும் பின்னும் செல்லும், பல யூகங்களும் அமைக்கபடும். ஆனால் போர் முடிந்தபின் பாண்டவர்களும் கௌரவர்களும் ஒன்றாய் கலந்து சிரிப்பது இங்கு மட்டும் தான்.
பிறகு ஆசிரியர்கள் அறைக்குள்ளே சென்றேன். கடவுளே! ஏன் அவர்களிடமிருந்து நல்ல பெயர் மட்டும் வாங்கினேன்? இன்னும் அவர்கள் உளி வலுவாய் பட்டிருந்தால் ஒரு வேளை இன்னும் அழகான சிற்பமாய் இருப்பேனோ?
முழுக் கவிதையில் பாதி கூட புரியாதவன் போலவே இருக்கின்றேன். மறந்தும் மறைந்தும் போன கவிதையைத் தேடுகிறேன்.
“ட்ரிங்” என்று பள்ளி மணி அடித்தது பள்ளி முடிந்ததைத் தெரிவிக்க, “ட்ரிங்” என்று அலாரம் அடித்தது கனவு முடிந்ததைத் தெரிவிக்க. படால் என்று எழுந்தேன், பீரோவை திறந்தேன், மாசு படிந்த இயந்திர வாழ்க்கையை என் பள்ளி சீருடையின் வாசத்தால் தூய்மையாகிட.
Very nice keep it up, congratulations