எதையாவது எழுத வேண்டும் என்ற துடிப்பு. ஒரு எழுத்தாளனாக இருந்தால் தினமும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அவன் எழுத்தாளனாக இருக்கவே முடியாது. எதையாவது ஒன்றை தினமும் படைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எனக்கும் அதே எண்ணம்தான் இருக்கிறது. ஒரு நாளில் நான் ஒரு கவிதையோ, கதையோ அல்லது ஒரு கட்டுரையோ எழுதாமல் விட்டால் எனக்கு அந்த நாளை வாழாத நாள் போலவே இருக்கும்.
இருந்தும் எதைப்பற்றி எழுதுவது? எழுதினால் அது நன்றாக வருமா? அப்படி நன்றாக வந்தால் நான் அதில் கூறும் விஷயங்கள் பொருள் குற்றம் இன்றி, படிப்போருக்கு விளங்குமா? இல்லை என்றால் அது பொருளிழந்து, வழி தொலைந்து, யாருக்கும் பிடிக்காமல் போகுமா? இதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கிறேன், எதையும் எழுதாமலேயே.
ஒரு எழுத்தாளனுக்கு பிடித்ததும் பிடிக்காமல் இருப்பதும் ஒன்றே தான்! வெள்ளைக் காகிதம். எந்த வித தடைகளும் இன்றி, எந்தவித எல்லைகள் இன்றி அவன் நினைக்கும் இடமெல்லாம் போய் வரலாம். அவன் கூற நினைப்பதெல்லாம் இங்கே பயமின்றி சொல்லலாம். அதே சமயத்தில், அவனுக்கு சொல்ல எதுவும் இல்லை என்றால் அந்தக் காலியான காகிதமே அவன் மனதை வாட்டி எடுக்கும்.
இப்பொழுது எனக்கு மிகவும் பிடித்த காகிதம் வெறுப்பையே உண்டாக்குகிறது. ஏனெனில், அது காலியாக இருக்கிறது. அதை அன்புடன் பார்க்க முடியவில்லை.
நான் எதையாவது எழுதியே தீர வேண்டும்!
காகிதத்தில் இருந்து என் தலையை நிமிர்த்தினேன். இப்பொழுதுதான் என் பிம்பத்தை எதிரில் உள்ள கண்ணாடியில் கண்டேன். அதிலே நான் ஒரு ராஜாதி ராஜனை போல இருந்தேன். எல்லா செல்வங்களைப் பெற்று மகுடம் சூடி கம்பீரமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜாவை பற்றி நான் பேசவில்லை. உலகத்தையே கைப்பற்றி விட்டு, எல்லா செல்வங்களையும் தனதாக்கி, இறுதியில் அந்த ஆறடி நிலத்தை மட்டும் கைப்பற்றத் தவறிய ஒரு மன்னனாகவே என்னைக் காண்கிறேன்.
பொறுங்கள்! நான் சாவைப் பற்றி பேசவில்லை. நான் சொல்ல நினைப்பதெல்லாம் வேறு.
மனதுக்குள் ஆயிரம் கற்பனைகளை வைத்துக்கொண்டு, அதை மனதுக்குள்ளேயே அழகிய சொற்களாக பின்னியும் விட்டு, இறுதியில் காகிதத்தில் பதிக்கலாம் என்று வருகையில், என் சொற்களும், என் தமிழும் என்னை ஏமாற்றுகிறது.
இதையெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது எனக்கு காதலைப் பற்றிய ஒரு சிந்தனை என் மனதிற்குள் தோன்றுகிறது. நான் இதுவரை காதலித்துப் பார்த்ததில்லை, காதல் கவிதைகளை மட்டுமே எழுத கற்றுக் கொண்டுள்ளேன். (என்றைக்காவது ஒருநாள் அது உபயோகப்படும் என்று ஒரு ஆசையில் தான்!) எனக்கு இங்கே ஒரு எழுத்தும் வராமல் இருப்பதற்கும் காதலுக்கும் என்னதான் சம்பந்தம்? இருக்கிறது சொல்கிறேன்.
காதல் எப்பொழுது மிக அழகாக இருக்கும், உங்களுக்குத் தெரியுமா? அது தோன்றும் போதும் இல்லை, அதை செய்யும்போதும் இல்லை, அதை சொல்லும் போதும் இல்லை. இருவருக்கும் காதல் இருந்தும் யாருமே அதை சொல்லாமல் ஒளித்து வைக்கும் நேரங்கள்தான் மிகவும் அழகானது. அதற்காக காதலை சொல்லி விட்டால் அதன் அழகு குறைந்துவிடும் என்று நான் கூறவில்லை. எது கண்களுக்குப் புலப்படாமல் இருக்கின்றதோ, எது கைகளுக்கு கிடைக்காமல் இருக்கின்றதோ, எது நம் சிந்தனைக்கும் அப்பாற்பட்டு இருக்கிறதோ, அதுதான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயம்.
அப்பொழுது சொல்லாத கவிதைகளும் எழுதாத வார்த்தைகளும் அழகாகுமா? கண்களுக்குத் தெரியாமல் இருப்பதும், இருந்தபோதிலும் அது இல்லாமல் இருப்பதும் ஒரு மிகச் சிறந்த படைப்பாகுமா?
ஆனால், எந்த சாகித்திய அகாடமி விருதும், ஆஸ்கார் விருதும், இல்லாத ஒரு படைப்புக்கு போவதில்லை. அப்பொழுது அங்கீகரிக்கப் படுவதுதான் அழகா? மனதுக்குள்ளேயே பூட்டி வைத்த சிந்தனைகள் எல்லாம், தான் இருக்கும் நிலையிலேயே மிகச்சிறந்த படைப்பாக முடியாதா?
நாம் தினமும் கண்டு தேர்ச்சியடைந்து, பிறகு சலிப்படைந்த இந்த உலகத்தையும், இரவில் நாம் கண்ணுறங்கும் பொழுது, நம் கனவில் வரும் உலகத்தையும், ஒப்பிட்டுப் பார்த்தால், நம் கனவு உலகமே மிக அழகாக தோன்றுகிறதே! ஏன் அப்படி?
நாம் தினமும் பார்க்கின்ற இந்த உலகத்திற்கு ஒரு பெயர் இருக்கிறது. அதற்கான செயல்கள் அனைத்தும் இங்கே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நம் கனவு உலகத்திற்கு ஒரு பெயர் இல்லை ஒரு வடிவம் இல்லை. அந்தப் பொழுதில் அது என்னவாக இருக்கிறதோ அதுதான் அதன் வடிவம்.
இதைப்போல எப்பொழுது நாம் ஒரு பொருளுக்கோ, ஒரு இடத்திற்கோ, அல்லது, ஒரு மனிதனுக்கோ, ஒரு பெயர் சூட்டும் பொழுது, அது அந்த பெயராகவும், அந்தப் பெயருக்கு உண்டான அனைத்து குணாதிசயங்களுமாகவே அது மாறுகின்றது.
சரி இருக்கட்டும், நமக்கு தெரிந்த இந்த உலகத்தில் நடப்பதற்குத் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால், வெளி உலகத்திற்குத் தெரியாமல், நம் சிந்தனைக்குள்ளே இருப்பதெல்லாம் அழகில்லை என்று, எவ்வாறு சொல்ல முடியும்?
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நான் இப்பொழுது இந்த நிஜ உலகத்திற்கு வந்தேன். மேஜை மேலே பார்த்தால், அந்தக் காகிதம் இன்னும் வெறுமையாகவே இருந்தது. காற்றில் அது படபடவென துடித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது அதை எனக்கு வண்ணங்கள் இல்லாத ஒரு பட்டாம்பூச்சியைப் போல தோன்றியது. அதன் மேலே இருந்த எழுதுகோளை எடுத்தேன். படபடவெனத் துடித்த, அந்த வெள்ளைக் காகிதம் இப்பொழுது சிறகு வந்ததைப் போல ஒரு பறவையாய் பறந்தது. உடனடியாக என் எண்ணங்களை எல்லாம் அதனுடன் ஒரு நூலாய் நான் இணைக்கும் போது, பறவையாய் இருந்த அந்த வெள்ளைக் காகிதம், இப்பொழுது என் கைகளுக்குள் ஒரு காத்தாடி ஆனது. நல்லவேளையாக அதிலே நான் எதையாவது எழுதி இருந்தால், இன்னுமே அது, காகிதமாகத் தான் இருந்திருக்கும். வெறுப்பைத் தந்த அந்த வெறுமையான காகிதம், இப்பொழுதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
அந்த வெள்ளைக் காகிதத்தை என் மனதுக்குள் மடித்து வைத்தபோது, இன்னும் அது அழகாக மாறியது.
Loved it? Why not share it?
1 Comment