உனக்கு இது தேவைப்படும்.
எல்லா மனிதனின் வாழ்க்கையில் வரும் துன்பம் போல, உன் வாழ்க்கையிலும் துன்பங்கள் ஒன்று கூடும்போது, இது உனக்கு தேவைப்படும்.
இன்று, இந்த கடிதத்தை படிக்கும் பொழுது, நீ உருவாக்க நினைத்த வியாபாரம் உன்னை கை விட்டிருக்கலாம்; நீ விரும்பிய பெண் உன்னிடமிருந்து சென்றிருக்கலாம் அல்லது நீ ஒரு வெள்ளைக் காகிதம் போல வெறுமையாய் இருக்கலாம்; இனிமேலும் நான் வாழ தகுதியற்றவன் என்று கூட நினைத்திருக்கலாம்.
நான் சொல்வது சரியென்றால் இந்தக் கடிதம் உனக்காக!
இதை எழுதியது நீ தான். நீ இருக்கும் காலத்தில் இருந்து பல வருடங்கள் பின்னோக்கி வந்தால் என்னை நீ சந்திக்கலாம்!
நீ எங்கே இருக்கிறாய், என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இருப்பினும், என்னைப் பற்றி, அதாவது, நீ வாழ்ந்து மறைந்த உன்னைப் பற்றிச் சொல்கிறேன் கேள்!
எனக்கு மூன்று வேளை உணவும், உடுத்த ஆடைகளும், தலைக்கு மேலே கூரையும், ஆடம்பரத்துக்காக ஒரு சில பொருள்களும் கிடைக்கின்றது.
இது எதையும் எனது உழைப்பால் சம்பாதித்து அல்ல.
ஆனால், உன் தட்டில் இருக்கும் கசப்பும், துவர்ப்பும், காரமும், புளிப்பும் இனிப்பும் உன் வியர்வையால் ஆனது.
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், ஓராயிரம் குரல்கள் குறை சொல்கிறதா?
உன் நிலைமை எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னிடம் யாருமே குற்றம் கண்டுபிடிக்கவில்லை.
அதற்காக நான் சரியான பாதையில் செல்கின்றேன், நீ தவறான திசையில் செல்கின்றாய் என்று அர்த்தமா?
நான் சொல்கிறேன் கேள்!
என்னை எவரும் பழி கூறாமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா?
எல்லோரும் செல்கின்ற அதே ஒற்றையடிப்பாதையில் தான் நானும் பயணிக்கிறேன். என் பிழை சொன்னால், அவர்களும் பிழை செய்தவர்கள் ஆவர். அதனால்தான் இந்த சமூகம் என்னைக் கண்டு கொள்ளவில்லை.
உனக்கு எதிராக பலபேர் நின்றாலும், ஒரு நிமிடம் நில்! சிந்தித்துப் பார்!
நீ செய்யும் காரியங்கள் பிறரை அவமதிக்கவோ, ஆபத்தில் தள்ளிடச் செய்கிறதா?
இல்லை என்றால், நடக்கத் தொடங்கு. முந்தைய வேகத்தைவிட நீ இன்னும் வேகமாய் நடக்கத் தொடங்கு!
நீ செல்லும் பாதைகளில் தடங்களும் தயக்கங்களும் வரும்.
ஒன்றை நினைவில் கொள்!
இப்பொழுது நான் வெற்றியைப் பற்றி மட்டும் தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் நீயோ, என்னை விட பல அடிகள் எடுத்து வைத்து இருக்கிறாய். பல தோல்விகளையும் நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறாய்.
உண்மையில் பார்த்தால், ஒன்றுமே செய்யாமல் இருக்கும் நான் தான், ஒவ்வொரு நொடியும் தோற்கிறேன்!
நீ பல தோல்விகளை சந்தித்தும் வெற்றி பெற்று இருக்கிறாய்.
ஒவ்வொரு முறையும் நீ தோற்கும் போது, உனக்கு அழுகை வரும்.
அழுகை வந்தால் அழு!
நான் எப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உன் அழுகைக்கு காரணம் என்ன தெரியுமா?
வாழ்க்கை உன்னை செதுக்க தன் ஆணியால் முதல் அடியை அடித்திருக்கிறது. நீ கூடியவிரைவில் அழகான சிற்பமாகப் போகிறாய். அதுவும், காலத்தால் அழிக்க முடியாத சிற்பமாகப் போகிறாய்!
வாழ்க்கையின் அச்சாணி என்மீது பட நான் கொடுத்து வைக்கவில்லை!
போ! நீ தூக்கி எறிந்த கனவுகளை மீண்டும் எடு! நீ தோற்றதாய் எண்ணிய உன் காதலை மீட்டெடு! உன் திறமையை காட்ட தனித்திரு.
நீ புதிய மனிதனாய் பிறப்பெடு!
Loved it? Why not share it?