Anbudan Avalukku

அன்புடன் அவளுக்கு…

அவளுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அவள் இப்பொழுது வரை ஒரு உருவற்ற உணர்வாகத் தான் இருக்கிறாள். 

அவள் என்று சொல்லும் போது என் மனதில் ஒரு முகமோ, குரலோ, அல்லது ஒரு தொடுதலோ வரவில்லை. ஒரு தோடு கன்னத்தை உரசும் போது ஏற்படும் சிலிர்ப்பாகவே அவள் வருகிறாள். 

அவள் என்று சொன்னால் ஒரு தேடல் பிறக்கின்றது. கண்கள் அவளை கண்டுபிடிப்பதற்காகவும், காதுகள் அவள் குரலை தனித்து வைத்து மீண்டும் மீண்டும் பிடித்த பாடல் போல கேட்பதற்காகவே படைக்கப்பட்டதோ என்று நினைக்க வைக்கிறது.

அவள் என் இருக்கும் நொடியை அழகாக்குகிறாள். வரும் நொடியை அவள் சொந்தமாக்குகிறாள். என் கடந்த நொடியிலும் அவள் கைரேகைகளை பதிய விட்டு சென்றிருக்கிறாள்.

மழையைத் தவறவிட்ட சிறுவன் மரக்கிளைகளை தட்டி விட்டு அதில் தங்கி இருக்கும் மழைத்துளிகள் தன்னை வந்து நனைக்கும் போது அவன் முகத்தில் இருக்கும் அந்த குழந்தைத்தனமான ஆனந்தம் தான் என்னையும் அவளை பற்றி நினைக்கும் பொழுது நனைக்கிறது.

அவள் என்னும் உணர்வுக்கு உருவத்தை தேடி எத்தனையோ பேருந்துகளை தவற விட்டிருக்கிறேன் எத்தனையோ தேநீர்களை ஆறவிட்டிருக்கிறேன்.

ஒரு சூட்கேசில் போட்டு பூட்டி வைக்கப்பட்ட என் ஆசைகளாகவும் கனவுகளாகவும் இருக்கிறாள் அவள்.

கனவுகள் என்றவுடன் ஞாபகம் வருகிறது ஞாபகத்தில் தங்காத கனவுகளில் அவள் ஒன்று இரண்டு முறை வந்து இருக்கிறாள். 

கனவில் என் பக்கத்தில் உட்காரும் கோடையின் கதகதப்பு அவள். பொய் சண்டைகளுக்கு பின் கொஞ்சலின் ஏக்கம் அவள். “சரி நான் போயிட்டு வரேன்!” என்று அவளை சொல்ல விடாமல் அடுத்தடுத்து பேச தலைப்புகளின் தேடல் அவள். 

குவியமில்லா ஒரு புகைப்படம் போல் அவள் முகம் கனவில் தெரிந்தாலும், அவள் பார்வை மட்டும் என் மீது இருப்பதை நன்றாக உணர முடிந்தது.

இவ்வாறே தூக்கம் வரும் நேரமெல்லாம் அவள் வரும் நேரமாகிவிட்டது. 

இப்படிப்பட்ட உணர்வானவளை உருவமாய் என்றாவது ஒருநாள் நான் கடந்து சென்று இருக்கிறேனோ?

பேருந்தில் இரண்டு இருக்கை தள்ளி நானும் அவளும் சற்று நேரம் பயணித்திருக்கிறோமோ? தாமதமாய் திரையரங்கிற்கு சென்று முதல் ஐந்து நிமிட கதையைக் கேட்டு தெரிந்து கொண்டேனே, அதை சொன்னவள் அவள் தானா? 

ஒருவேளை நானும் அவளும் இதுவரை சந்திக்காமலும் இருக்கலாம். அவள் எங்கேயோ, நான் எங்கேயோ. என்னையும் அவளையும் மெல்ல மெல்ல நகர்த்திக் கொண்டு வர எத்தனையோ பட்டாம்பூச்சிகளின் சிறு சிறு இறகுகள் அசைய வேண்டி இருக்கிறதோ? 

எது? பட்டாம்பூச்சியா? ஆம்!

அய்யனாவரத்தில் பட்டாம்பூச்சி சிறகு அசைந்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் அயர்லாண்டில் பூகம்பத்தை வரவழைக்கும். இதற்கு ஆங்கிலத்தில் பட்டர்பிளை எஃபெக்ட் என்று சொல்வார்கள். அதனாலோ என்னமோ காதலியை பார்த்தால் ஆயிரம் நூறாயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கிறதோ? 

அவளை என் அருகில் கொண்டு வரவழைக்கும் அந்த அடுத்தடுத்த நகர்வுகளின் முதல் அசைவு எங்கிருந்து எப்பொழுது வருமோ? 

காதலிப்பவர்கள் எதிர்பார்த்து இருக்க தன் காதலியோ காதலனோ அனுப்பும் குறுஞ்செய்திகள் இருக்கிறது. அவளை சந்திக்கும் வரை நான் என்ன செய்வது? 

அவளை நினைத்து மனம் ஏங்குவதில் இருந்து சற்று ஓய்வெடுக்கவே அவளைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கத்தான்  முடியும். 

இந்த வார்த்தைகளில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களும் பட்டாம்பூச்சிகள் ஆகி, தன் சிறகுகளை அசைத்து, என்னை அவள் அருகில் கொண்டு வரும் என நம்புகிறேன்.

கடிதத்தின் முடிவில் இப்படிக்கு என்று என் பெயர் போட்டு விடலாம். ஆனால் தொடக்கத்தில் அன்புடன் என்று யார் பெயரை எழுதுவது? 

பிடித்த பெயரில் பிடித்தமானவள் வருவாளோ, அல்ல பிடித்தவரின் பெயர் பிடிக்குமோ? காதல் பித்து பிடிப்பதே இங்கே முக்கியம் என்பதால் பெயரில் என்ன இருக்கிறது? 

ஆதலால் அன்புடன் அவளுக்கு இது நான் எழுதுவது. பத்திரமாக நான் சொன்ன அந்தப் பெட்டிக்குள் இந்த கடிதத்தை வைக்கிறேன்.

அவள் வரும் வரை இந்த கடிதத்தை உங்களுக்கு வாசிக்க தர மாட்டேன்!