அன்புடன் அப்பாவிற்கு,
உன்னை பற்றி நினைக்கும் போது, எனக்கு ஞாபகம் வருவதெல்லாம் ஒரே நினைவு தான்.
குறுகி போன என் உடல், ஈரம் படிந்த என் கன்னங்கள், தேகமெல்லாம் சின்ன சின்ன பூகம்பம் போல நடுக்கங்கள். இதற்கு காரணமாக இருந்த உன் பூதாகரமான தோற்றம் தான்.
கையிலே ஒரு லெதர் பெல்ட்டை வைத்துக்கொண்டு, என்னை இடதும் வலதுமாய் அடிப்பாய்.
மூடிய படுக்கை அறை கதவுக்குப் பின்னால், மெலிதாக அம்மாவின் குரல் கேட்கும்.
“பரவாயில்லைங்க, தெரியாம பண்ணிட்டான், விடுங்களேன்!”
சற்று என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு, குரல் வந்த திசை நோக்கி,
“எல்லாம் நீ குடுக்குற செல்லம். நீ கொஞ்சம் சும்மா இரு!”
மீண்டும் என் பக்கம் திரும்பி, என் கால்கள் மீது இரண்டு அடி போடுவாய்.
நீ அடித்த காயங்கள், காலத்தில் தொலைந்து காணாமல் போனது போல, இந்த ஆத்திரமும் உன்னிடம் இருந்து காணாமல் போய் விட்டது.
உன்னை கண்டாலே நடுங்கும் என் கைகள், இன்று எப்படி உன் தோள் மீது உள்ளது? இந்த மாற்றம் எதனால் வந்தது?
சீறி பாயும் வெள்ளம் இறுதியாக அமைதியான குளமாக மாறுவது போல தான் உன் குணமோ?
இன்று இதையெல்லாம் எண்ணிப் பார்க்கையில், நம் உறவு எவ்வளவு பெரிய பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று காணமுடிகிறது.
நான் சிறுவயதில் உன் அன்பில் எவ்வாறு வளர்ந்தேன் என்று எனக்குத் துளிக் கூட ஞாபகம் இல்லை!
எத்தனை முறை என் சிறு உடலை ஒரு கையில் தாங்கி இருப்பாய்! அப்பொழுது நான் யார் என்று கூட உனக்கு தெரிந்திருக்காது! இருந்தாலும், நான் தான் உன் உலகமாக இருந்திருப்பேன். என்னை கொஞ்சிய பிறகு தொட்டிலில் வைப்பாய். அப்பொழுது, உன் வியர்வை வாசம் என் மீது படிந்திருக்கும்.
என் தாயிடம் ரத்தத்தால் உறவு தொடங்கியது என்றால், அந்த ஒரு வியர்வைத் துளியில் தான் நம் உறவும் தொடங்கியது.
சிறுவயதிலே என்னை எப்படி வளர்த்தாய் என்று எனக்குத் தெரியாது. அந்த நினைவுகள் எல்லாம் எனக்கு உன் கண்ணீரைப் போல மறைந்தே இருக்கிறது.
ஆம்! உன் கண்ணீரை நான் என்றுமே பார்த்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த நா.முத்துக்குமார் அவர்களின் ஒரு பாடல் வரி ஞாபகம் வருகிறது.
“தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை!” என்று சொல்லும் வரிகள் தான் அவை. இந்த வரிகளின் ஆழம் எனக்கு இன்று தான் புலப்படுகிறது.
உன் மன தைரியத்தை எனக்குக் கற்றுக் கொடு. ஏனென்றால், வாழ்க்கையின் இன்பத்தையும் துன்பத்தையும் நான் கூடிய விரைவில் சுமந்தாக வேண்டும்!
நீ தொடங்கிய இடத்தை நான் மெல்ல மெல்ல நெருங்குகிறேன்.
ஆனால், உனக்கு இருந்த அந்த தளராத இதயம் எனக்கு இல்லை.
அதற்கு காரணம் நீதான். ஆம்! வாழ்க்கையில் நீ செய்த ஒரே தவறு இதுதான்.
என்னை ஒரு கஷ்டத்தையும் காண விடவில்லை. தோள் மீது என்னை போட்டுக்கொண்டு, எதிர் வரும் தீவினைகளை எல்லாம் நீ அழித்துவிட்டு, நான் பார்ப்பதற்கு ஒரு அழகிய உலகை விட்டுக்கொண்டு போகிறாய்.
அப்பா! உன்னைப் போல இருக்க நான் தினமும் முயற்சி செய்கிறேன். என்னையும் உன்னையும் சேர்த்து யாரேனும் பார்த்தால், “பையன் உங்கள போலவே இருக்கானே!” என்று சொல்வார்கள்.
ஆனால், அது வெறும் தோற்றத்தால் மட்டுமே! உன்னைப் போலவே இருக்க நான் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது.
என்னதான் உன் காலடிகளில் தினமும் ஒரு வெற்றியை குவித்தாலும், ஏனோ அது உன் அளவுக்கு இல்லை. நான் மலையாகக் காண்பதெல்லாம் உன் அருகே சிறு கற்களாய் மாறிவிடுகிறது.
இன்று உன்னிடம் மட்டும் நான் மாற்றத்தைக் காண்பதில்லை, என்னிடம் கூட ஒரு மாறுதலை காண்கிறேன்.
பள்ளி பருவத்திலே ஒவ்வொரு நாளும் வேகமாக சென்று சனிக்கிழமை வராதா என்ற எண்ணம் வரும்.
இப்பொழுதும் சரி, விடுமுறை நாட்களுக்காக பிற நாட்களை வெகு சீக்கிரமாக கடக்க முயல்கிறேன்.
ஆனால், இந்த எண்ணம் எவ்வளவு பெரிய தவறு என்று உணர்கிறேன்.
ஏனென்றால், வேகமாக செல்லும் ஒவ்வொரு நாளிலும், உன்னுடன் நான் பகிரும் நேரமும் குறைந்து கொண்டே வருகிறது.
நீ என்னுடன் இல்லாத வேலைகளில், நீ தனிமையில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. என்னை பற்றியும், நம் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறாய்.
அப்பா! நீ கவலை கொள்ளாதே!
நான் அடுக்குவது கற்களாக இருக்கலாம். ஆனால், ஒரு நாள் நீ கண்டு வியக்கும் மலையாக அது மாறும்.
இப்படிக்கு,
உன்னால் பிறந்ததற்காக பெருமைப்படும் உன் புதல்வன்,
பா. அரவிந்தன்
Loved it? Why not share it?