நான் கண்களுக்குப் புலப்படாத ஒரு செல்லாக இருந்தபோது தான் நீ என்னை முதன்முதலாகக் கண்டாய்.
என் உருவத்தையும் பாலினத்தையும் அறிவதற்கு முன்பே என்னை நீ அறிந்து கொண்டாய்.
அல்ட்ரா சவுண்டில் என் கருப்பு வெள்ளை உருவத்தாலே உன் வாழ்வில் நான் பல வண்ணங்களைச் சேர்த்தேன். அதைக் கண்டு நீ ஆனந்தக் கண்ணீர் வடிக்கையில், அந்த துளியில் ஒரு பிரதிபலிப்பாக உன் கன்னத்தில் முத்தமிட்டேன்.
உன்னை நான் கண்ட முதல் தருணம் அதுவாக இருந்தாலும், உன்னை முழுமையாக உணர்ந்த பொழுது எது தெரியுமா?
என் பள்ளிக்கு நீ சமைத்து தரும் மதிய உணவை சாப்பிடும் போதுதான்.
ஒரு சில நேரம் அதை விரும்பியும் சாப்பிட்டு இருக்கிறேன், சலிப்பாக குப்பையிலும் வீசி இருக்கிறேன்.
வீசி எறியப்பட்ட பரிக்கைகள் மண்ணில் புதைந்த போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால், இன்று நினைத்து பார்க்கிறேன்.
கத்தியின் கீறல்களும், அடுப்பின் சூடும் உனக்கு பெரிதாக தெரிந்ததில்லை. அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு, “என் மகன் இதை விரும்பி உண்ணுவான்” என்ற ஒரே காரணத்தால் சமைத்தாய்.
அம்மா! இப்பொழுது உணர்ந்து கொண்டேன்.
நான் ஒவ்வொரு முறை உணவை வீணாக்கும் போது, நான் வீசியது உணவை அல்ல, உன் ஆசையை.
ஒரு துளிக்கு உலகம் எவ்வளவு பெரியது என்று அதற்குத் தெரியாது, அது கடலை சேரும்வரை. அதைப்போல தான், தாயின் முழு அர்த்தத்தை நான் வளர வளர அறிந்து கொள்கிறேன்.
பொதுவாக, தாய் என்றால் தியாகத்தோடு ஒப்பிடுவார்கள். ஆனால் நான் விரும்புவது, உன் குழந்தைத் தனம் தான்.
உனக்கு அவ்வப்போது ஆங்கிலம் பயில்விக்கும் போது உன் முகத்தில் வழியும் பிள்ளை தனத்தை நான் ரசிக்காத நாளே இல்லை.
அப்பொழுது, என் சிறு பிராயத்தில் நீ எனக்கு தமிழ் கற்றுத் தந்ததை நினைத்துக்கொள்வேன்.
மகன் தாயாகவும், தாய் மகளான முதல் தருணம் அது.
இன்னொரு வகையான குழந்தைத் தனத்தையும் உன்னிடம் நான் கண்டிருக்கிறேன்.
குழந்தை ஒரு சில நேரம் கூச்சலிட்டு அடம்பிடிக்கும். ஆனால் ஒரு சில நேரம் அக்குழந்தையின் குறுகுறு கண்களை உருட்டி, எந்த வார்த்தையும் இன்றி, மனதை தன் வசப்படுத்தும் அல்லவா?
நான் ரசிப்பது அதைத்தான்.
நீ வீட்டிலேயே முழு நேரம் இருப்பதால், திரையரங்குகளும், மால்களும், அங்கே பொறிக்கப்படும் பாப்கார்னும் உனக்கு வியப்பாக இருக்கிறது.
இதை நீயும் நானும் சமீபத்தில் திரையரங்கிற்கு சென்றபோது உணர்ந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு ஆசை உண்டானது.
இந்த உலகத்தையே உனக்கு காண்பிக்க வேண்டும். பூமிப்பந்தை உன் கைகளில் பொம்மை ஆக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் அந்த நொடியில் என்னால் செய்ய முடிந்தது, ஒரு மீடியம் பாப்கான் மட்டுமே!
அம்மா! கவலை வேண்டாம். உன் ஆசைகளை எனதாக்கி ஒவ்வொன்றாய் நிறைவேற்றுவேன்.
ஆசை என்றவுடன் ஞாபகம் வருகிறது.
உன் பிறந்தநாளன்று நீ என்ன ஆசைபடுவாய்? உன் ஆசைகளை நினைவாக்க எனக்கு போதுமான காலம் இருக்குமோ?
ஏனென்றால், நான் ஒவ்வொரு முறையும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லும் போது, நீ மெல்ல மெல்ல குழந்தையாகிறாய் நான் மெல்ல மெல்ல தாயாகிறேன்.
என்னை அல்ட்ரா-சவுண்ட் வாயிலாக பார்த்த முதல் முறை வந்த சிரிப்புடன், உன்னை காலம் உள்ளவரை பார்த்துக்கொள்ள வேண்டும்.
அம்மா! என் மடிமீது உன் தலை சாய்ப்பாய்! நான் எழுதிய கவிதைகளை படித்துக் காட்டுகிறேன்.
அமைதியாக, ஆனந்தமாக உறங்குவாய்!
மகன் தாயாக மாறினான். தாய் மகளாக மாறினாள்.
அன்புடன் அம்மாவுக்கு,
நீ உயிர் தந்த,
பா. அரவிந்தன்