பயம் எல்லோருக்கும் வருவதுதான்! ஆனால், எல்லோருக்கும் ஒரே பொருளின் மீது பயம் வருமா? அது என்னவாக இருக்கும்? படியுங்கள் இந்த கட்டுரையை – ஒளியின் நிழல்.
எல்லோருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மீது பயம் இருக்கும்.
சுவரில் ஒட்டிக்கொண்டு இருக்கும் பல்லியில் இருந்து, ஜுமான்ஜி படத்தில் வரும் ராட்சத சிலந்தி வரை அந்த பயம் ஆட்கொள்கிறது.
சில சமயம் ஒட்டடைக் கூட அட்டை பூச்சியாக மாறுகிறது.
இந்த பயமானது, அந்தப் பொருள் மீது அல்ல. அந்தப் பொருளை நாம் கட்டுப்படுத்த முடியாமலும், விரட்டியடிக்க முடியாமலும் இருக்கும் இயலாமையில் உதிக்கிறது.
ஏனெனில், சிங்கத்தை கட்டுப்படுத்துபவர் அதைக் கண்டு அஞ்சுவதில்லை!
பயத்தை தருபவை என்னவென்றால், அது கேட்போருக்கு ஏற்ப மாறுபடும். ஆனால், உலகத்தார் அனைவரும் பயப்படும் ஒன்று இருக்கிறது.
கரிய புடவைக் கட்டி, அனைத்து ஒலிகளையும் பன்மடங்காக்கி, கூர்மையான பார்வைக்கும் புலப்படாமல் இருக்கும் ஒன்று. அது யார் நினைத்தாலும் காண முடியாத ஒன்று. ஏனென்றால், அதன் வரவை தெரிவிக்காமலேயே சட்டென்று விழுங்கிவிடும்.
அதற்கு உருவமே கிடையாது, பெயர் மட்டுமே இருக்கிறது.
அது தான் இருள்!
இருள் மீது ஒரு பயம் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவாகும். நம்பவில்லையா?
அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கும் பந்தை இருட்டில் எறியுங்கள். அழுவான், அடம் பிடிப்பான். ஆனால், அந்த அறையில் மட்டும் செல்ல மாட்டான். பெரியோர்கள் மட்டும் என்ன, விதிவிலக்கா?
இருட்டறையில் செல்லும் அவர்களும் கூட, இருள் அடர்ந்த காட்டில் அந்தக் குழந்தையைப் போல் அழவில்லை என்றாலும், அதே குழந்தையின் மனப்போக்கில் தான் இருப்பார்கள்.
இருளிலே இல்லாத மிருகங்களும் பேய்களும் உருவம் பெற்று திரிகின்றது. இருளிலே தான் நாம் அன்றாட வாழ்வில் கேட்க முடியாத பல மெல்லிய சத்தங்கள் கேட்கின்றன.
மின்சாரம் சென்று இருள் வந்த பிறகே, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தாட்சியாக இருக்கும் இதயத்துடிப்பைக் கேட்க முடிகிறது.
இருள் மிகவும் அழகானது மற்றும் ஆழமானது.
பகலிலும் நிலவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதன் அழகோ, இருளின் அழகில் இருந்தே பிறக்கிறது.
இருள் சுதந்திரமானது. ஏனென்றால், இருள் ஒரு கருப்பு திரையாக நம் கண்கள் முன்னே விரிகிறது. அதிலே நமக்குப் பிடித்த உலகத்தை நாம் வரைந்து கொள்ளலாம். அதன் விஸ்தீரணம் கண்டு வியக்கலாம், ஒளி வந்து அதைக் கலைக்கும் வரையில்!
இருள் இன்பமயமானது. ஆழ்ந்த உறக்கமும் அதனுடன் வருகின்ற கனவுகளும் இருளிலே மட்டும் கிடைக்கப் பெறுபவை.
பகலில் கடற்கரையோரம் நடை போடலாம். ஆனால், மெல்லிய நிலவொளியில் தோய்த்த இருளில் அதே கடற்கரை சாலை வசீகரிக்கும் அழகை பெறுகின்றது. மனதில் அமைதியை விதைக்கும் வல்லமை பெற்றது.
ஒளி உலகம் இருளில் தனித்துவம் பெறுகிறது.
கண்களைக் கூசும் வானம், இருளில் ரம்மியமாக தோன்றும். ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் பொருந்திய மலர்கள் யாவும், இருளில் ஒரே வண்ணத்தை தான் பெறுகின்றது.
இருள் பயங்கரமானது. மிகுந்த வலிமை படைத்தது. இன்பமான உறக்கம் தோன்றும் அதே இருளில் தான், பலரின் உடமைகளும், ஏன்? உயிர் கூட பறிபோகிறது.
இதைப்போன்ற இருள் நேரங்கள், மர்மமும் கபட நாடகங்களும் நிறைந்தவை. என்னதான் காட்டில் தீப்பந்தத்தையோ டார்ச்சையோ கொண்டு சென்றாலும், அது பாதையின் சிறு தூரத்தையே காட்டுகிறது. பெரும்பாலான வழி, இருளுக்கு சொந்தமாகிறது. போகும் வழி முழுவதும் தெரிய வேண்டுமென்றால், அந்தக் காட்டை எரித்தால் மட்டுமே ஒளி பாய்ச்ச முடியும்.
பார்வையற்றவர்கள் இருளோடு ஒரு பந்தத்தை பெறுகிறார்கள்.
வண்ணங்களை தொட்டுப் பார்க்க வைக்கிறது. அழகை ருசித்துப் பார்க்கச் சொல்கிறது. பாதையை உணர்ந்து பார்க்கச் செய்கிறது.
இவர்களுக்கு இருள், ஒரு சில நேரங்களில் பரிசாகவும் மற்ற நேரங்களில் கடின பரிட்சையாகவும் அமைகிறது. இருளுக்கு கட்டுப்பட்டே அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.
இருள் முடிவில்லாதது. இருட்டிலே உங்கள் கைகளை நீட்டி பாருங்கள். முகத்திற்கு சற்று தூரத்தில் இருந்தால் கூட, நம் கைகள் கண்களுக்குப் புலப்படாது. ஏனென்றால், இருள் நம் கண்களுக்கு உள்ளே நுழைந்து, உடல் முழுவதும் உருகி வழிகிறது.
இருள் சூழ்ந்த அறையில் அகலை ஏற்றினால் கூட, ஒளியினாலே அந்த அகல் மீது இருள் படர்ந்து இருக்கும்.
இவ்வாறெல்லாம் இருக்க, இருள் மீது பயம் கொள்ளத்தானே வேண்டும்? இல்லை, பயத்திற்கு பதில் அதை ஒளியில் ஒரு பங்காகக் கொண்டு, ஒளிக்கு தரும் அதே மரியாதையைத் தர வேண்டுமா?
ஒளியின்மை தான் இருளா? அல்லது வேறெங்கோ சென்ற ஒளியின் நிழல் தான் இருளா? அப்பொழுது இருட்டு என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் அதன் உண்மையான வண்ணமென்—?
ட்டோப்!
அச்சச்சோ! மின்சாரம் போய்விட்டது. என் அறையில் இருள் சூழ்ந்துவிட்டது. என் பேனாவும் தரையில் விழுந்து விட்டது. ஒன்றும் செய்ய முடியாததால் நான் இருளிலே உட்கார்ந்திருக்கிறேன்.
ஒளி வரட்டும். இந்தக் கட்டுரைக்கு ஒரு முடிவை எழுதுகிறேன்.
Loved it? Why not share it?
Very nice