பொதுவாக ஒரு நாத்திகனிடம் கடவுளை பற்றி பேசத் தொடங்கினால் அவன் முதலாவதாக தன் வாதத்திற்கு “பிக் பாங் தியரி” (Big Bang Theory) யை தான் குறிப்பிடுவான். “எல்லாம் கடவுள் படைப்பு.” என்று ஆத்திகன் கூறினால் அவன், “எல்லாம் கடவுள் அல்ல, எல்லாம் அறிவியல். இந்த உலகம் ஒரு சிறு அணுவிலிருந்து தான் உருவாகியிருக்கிறது!” என்று மிகுந்த வெறுப்புடனும் கேலியுடனும் சொல்வான்.
ஆத்திகன் சொல்வான், “சரி, அணுவிலிருந்துதான் இந்த உலகமும் நாமும் ஜீவித்திருக்கின்றோம் என்று ஒப்புக்கொள்கிறேன்! ஆனால் அந்த ஒற்றை அணுவை உருவாக்கியது யார்? அந்த அணுவில் எப்படி மலைகளும், கடல்களும், காடுகளும், மனிதர்களும், விலங்குகளும், இவை அனைத்திற்கும் ஒரு செயலும், செயலுக்கென்று விதிகளும் எப்படி ஒரு மிகச்சிறிய அணுவிற்குள் தோண்றியது? இத்தனை பல்லாயிரக்கோடிக் கணக்கான படைப்புகளில், ஒன்று கூட இன்னொன்று போல இல்லை!”
“ஆராய்ச்சியாளர்கள் அதைத்தான் கண்டுபிடித்து வருகிறார்கள்.” என்று சொல்லி தப்பித்து விடுவான்.
கடவுளை நம்பிய ஆத்திகனுக்கும் பதில் இல்லை, அறிவியலை நம்பிய நாத்திகனுக்கும் பதில் இல்லை.
நாத்திகன் இதிகாசங்களெல்லாம் ஒரு மெகா பட்ஜெட் மாயாஜால “கிராப்பிக்ஸ்” திரைப்படக் கதைகளாகவே கருதுகிறான். அதற்கு ஆத்திகன், “இவை வெறும் கதைகள் இல்லை! அதில் வரும் கதாப்பாத்திரங்களும் அந்த கதை சொல்லும் தத்துவங்களும், நாம் நேர்வழியாக வாழ்வதற்கே!” என்பான்.
கடவுளை நம்பிய ஆத்திகனும், “இது கதையில்லை” என்று நிரூப்பிக்க முடியவில்லை, தன் அறிவியலையும் சுயபுத்தியையும் நம்பிய நாத்திகன், “இது கதையே!” என்று நிரூப்பிக்க முடியவில்லை.
இறைவன் நம்மை காப்பாற்றிக்கொண்டிருக்கும் வரை அது வாழ்வு, அவன் கைவிட்டாலோ அல்லது அழைத்தாலோ அது சாவு என்று ஆத்திகனும், இதயம் துடித்துக்கொண்டிருக்கும் வரை வாழ்வு, நின்றுவிட்டால் சாவு என்று நாத்திகனும் கூறுவான்.
இதில் எது சரியென்று சொல்ல முடியாதது போல் ஒரு சம்பவத்தை என் வாழ்வில் கண்டேன்.
எண்பத்திநாங்கு வயதான என் பாட்டி கடவுள் மீது எல்லையற்ற பக்தி வைத்திருந்தார். அவர் தன் வாழ்வின் இருதி கட்டத்தில், பிற வயோதிகர்கள் போலவே உடல் நிலை குறைப்பாட்டால் தவித்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து, ஒரளவு குணமானதும் விட்டிற்கு அழைத்து வந்தோம்.
தவித்துக்கொண்டிருந்த அவர், மிக நன்றாக தேறி பேசிக்கொண்டிருந்தார். உறவினர்களை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு அனைவரிடமும் உரையாடி மகிழ்ந்தார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது.
திடீரென்று ஒரு நாள், காலையில் இருந்தே, “தலையணயை எல்லாம் தூர எறி, தீட்டாகும்!”, “பசங்கள கூப்புடு!” என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தார்.
தன் பிள்ளைகள் எல்லோரும் வந்த பிறகே அவர் மிக உருக்கமாக பேசிக்கொண்டும், தன் நிறைவேறா ஆசைகளை எல்லாம் இனிமேல் உங்கள் பொறுப்பென்றும் சொல்லி, “நான் மதியம் இரண்டேமுக்கால் மணி அல்லது ஐந்து மணிக்குள் போய் சேர்ந்துடுவேன்!” என்று திடமாக சொன்னார். நாங்கள் அதை பொருட்படுத்தாமல் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தோம்.
மதியம் இரண்டு மணி அளவில், எங்களை சாப்பிட்டு வருமாறு சொல்லி அவர் ஹாலில் படுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டு வர இரண்டேகால் மணியாகிவிட்டது. பிறகு அவரும் சாப்பிட்டுவிட்டு என் தந்தை மடியில் சாய்ந்தார்.
சில நிமிடம் கழித்து என் தாய் அழைத்தார். முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் தென்பட்டது. தந்தையின் மடிசாய்ந்த பாட்டியின் உடல் அமைதியாக இருந்தது.
மூச்சின் வேகம் குறைந்திருந்தது. கண்கள் மூடிக்கொண்டிருந்தது. பிறகு ஒரு சத்தத்துடன் ஒரு பெரிய மூச்சுக்காற்று வாய் வழியே சென்றது. எண்பத்திநான்கு வயது நினைவுகளை அந்த ஒரு மூச்சுக்காற்று எடுத்து சென்றது.
கடிகாரத்தை கண்டேன். இரண்டு நாற்பது.
கடவுளை காண ஐந்து நிமிடம் முன்பாக சென்றார் போலும்!
சொன்ன நேரத்தில் உயிர் பிரிந்தார்.
நாத்திகனே! இதை அறிவியலென்று சொல்வாயா?
இறந்து மீண்டும் பிழைத்த மனிதர்கள் ஒன்றே தான் கூறுகிறார்கள். “நான் கடவுளை கண்டேன்! ஒரு பிரகாசமான ஒளியை கண்டேன்!”
அவரவர் மதத்திற்கு ஏற்றதுபோல கடவுளின் வடிவம் மாறினாலும், அறிவியலுக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. நாத்திகன் இந்த கூற்றை ஒருபோதும் உறுதியாக நிராகரிக்க முடியாது!
இந்த சம்பவத்துக்கு பிறகே கடவுள் இருக்கிறார் என்று உறுதியாக நம்பினேன்.
அப்படியில்லையென்றாலும், ஏதோ கண்ணுக்கு புலப்படாமல் ஒரு சக்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால், இன்னொறு விஷயத்தை நினைக்கும் பொழுது அந்த நம்பிக்கை சிதறுகிறது.
இடி அமின் என்ற உகாண்டா ஜனாதிபதியின் வாழ்வை பற்றி யோசனை செய்யும் போது தான் அந்த நம்பிக்கை என்னை விட்டுப் போகிறது. இடி அமின் ராணுவத்தில் சேர்ந்து அதற்கு தளபதியாகவும் ஆனான். அப்பொழுது இருந்த ஜனாதிபதியையும் ரகசியமாக தாக்கி அவன் பதவிக்கு வந்தான்.
அதிகார பலம் வந்த காரணத்தால் பல ஆசைகளில் மூழ்கினான். பல அனியாயங்களை செய்தான். என்னென்ன செய்தான் அதை எவ்வாறு செய்தான் என்று கூற நா கூசும். அவனால் நேரடியாகயும் மறைமுகமாகயும் தோராயமாக ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது என்று மனித உரிமை அமைப்புகளின் கருத்தாகும்.
இவ்வாறு கொடூரமான ஒருவன் தன் வாழ்நாளில் எந்த விதமான கஷ்டங்களும் இல்லாமல் மறைந்தான்.
ஏன் இவன் விதைத்த பாவங்கள் இவனை வேரறுக்கவில்லை! ஏன் இவன் கர்மங்கள் இவனை ஒன்றும் செய்யவில்லை! ஏன் ஹிட்லருக்கு வேலை செய்தது, இடி அமினுக்கு செய்யவில்லை?
“அடுத்த பிறவியில் கர்மங்களை அனுபவிப்பான்” என்று ஆத்திகன் கூறுவான். ஆனால், போன பிறவியின் வலிகள் தெரியாதபோது, அடுத்த பிறவியின் வலிகள் எப்படி தெரியும்? அப்படி அடுத்த பிறவியில் பாவங்களுக்காக அனுபவித்தாலும் அது பொருளில்லாமல் போகும், ஏனெனில் அவன் செய்த பாவங்கள் இந்த பிறப்பில்.
அறியாமல் செய்த குற்றங்களுக்கு உடனடியாக மன்னிப்பு உள்ளது என்று இதிகாசங்கள் கூறுகின்றன. இந்த கூற்றின்படி, நான் போன பிறவியல் என்னசெய்தேன் என்று எனக்கு தெரியாது. அந்த பிறவியின் பாவங்களுக்காக இந்த பிறவியில் என்னை தண்டிக்கும் செயலும், செய்த புண்ணியங்களுக்கு பரிசளிப்பதும் அர்த்தமில்லை.
மேல் கூறியதெல்லாம் ஒரு இருபத்தி இரண்டு வயதாகும் இளைஞனின் மூளைக்குள்ளிருந்தே! இவையனைத்தும் தவறாக இருக்க கூடும் அல்லது சில கருத்துகள் சரியாக இருக்கக்கூடும். நான் சொல்வதுதான் சரியென்று கூறவும் இல்லை. எல்லாம் என் மனதில் தோன்றிய சலனங்களே! கடவுளை வெறுக்கும் மனமும் என்னிடம் இல்லை, முட்டாள் தனத்தை ஏற்கும் மனமும் என்னிடம் இல்லை. அறிவியலோ கடவுளோ! எதுவாக இருந்தாலும் சரி. இதை வைத்து இந்த அற்ப மனிதன் சண்டைபோடாமல் இருந்தால் போதும்!