என்ன நேரம் இப்பொழுது? வெளியிலே இருட்டாகி விட்டதால் இதை இரவு என்று எண்ணிக் கொள்கிறேன்.
நான் எவ்வளவு நேரமாக உன் படுக்கை அருகில் உன் முகத்தைப் பார்த்து இருந்தேன் என்று தெரியவில்லை.
அந்த மருத்துவமனை அறையில் எந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருவேளை… நான் எந்த சத்தத்தையும் கேட்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
உன் படுக்கை அருகில் என்னை போலவே மறுபக்கத்தில் ஈசிஜி மானிட்டர் துடித்துக் கொண்டே இருந்தது. ஏற்றமும் இறக்கமும் இருந்தால் தான் வாழ்க்கை என்று அதை பார்க்கும் பொழுது உணர்ந்தேன்.
நான் அந்த வினாடிகள் தெரியாத இரவில் உன் கால்களை பிடித்துக் கொண்டிருந்தேன். நீ நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாய்.
பெரும் போரில் வெற்றி பெற்ற பிறகு ஒரு வீரன் தன் வீடு திரும்பி ஆனந்தமாக பெறும் உறக்கமில்லை இது. இன்றைய போரில் வெற்றி பெற்று நாளை மீண்டும் இன்னொரு போருக்கு வலிமையை சேர்க்கும் ஒரு வீரனின் உறக்கம் இது.
இருந்தும் நீ கண்களை மூடி உறங்குவது எனக்கு நிம்மதியை தருகிறது. இதைப் பார்ப்பதற்காகவே நான் எத்தனை நேரம் ஆனாலும் கண்விழித்து உன்னருகிலே காத்திருப்பேன்.
வாழ்க்கையின் கருணை அற்ற நிஜம், கனவுகளை வெல்வதில்லை. ஆனால், உனக்கு மட்டும் தான் தெரியும், நீ காணும் கனவுகள் இன்பமானவையா அல்லது துன்பமானவையா என்று.
நீ எத்தனை போர்களை தான் சந்திப்பாய்? ஒவ்வொரு முறையும் உன் தோலை கிழித்துக்கொண்டு ஒரு ஊசி செல்கிறதே, எத்தனை முறை தான் அதை தாங்குவாய்?
ஒவ்வொரு முறையும் உன் எலும்புகள் அறுக்கப்படும் போது, எத்தனை முறை தான் அந்த வலியை தாங்குவாய்? எத்தனை முறை தான் தனியாக நின்று போரிடுவாய்?
துணை வேண்டும். உனக்கும். எனக்கும். ஆனால் யார் வருவார்?
உன் விரல்களை பிடிப்பதை போல நான் அந்த இறைவனின் விரல்களையும் பிடிக்கிறேன்.
கல்லாய் இருந்தவன் கடவுளானது எப்படி என்று எண்ணுகிறாயா? என்ன செய்வது?
வேண்டும் என்று எண்ணவைக்கும் ஒன்று இருக்கும்பொழுது தான் வேண்டுதல்கள் பிறக்கிறது. வேண்டுதல்கள் இருப்பதாலே தான் அந்தக் கடவுளும் இன்னும் பிழைக்கிறான். ஆனால் கடவுளை நிந்திக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், அவன் இன்னும் செய்யவேண்டிய அதிசயம் ஒன்று மீதி உள்ளது.
பல நாள் நீண்டு கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் முதல் நாளுக்கு சென்று, தவறானதை எல்லாம் சரி செய்தால் போதும்.
இப்பொழுது இருக்கும் நரகம் இல்லாமல் போகும். உன் வானத்தில் அம்புகள் இன்றி, பல வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்திருக்கும். முள் செடிகள் வளர்ந்த பாதையில் பூக்கள் நிறைந்திருக்கும்.
மொத்தத்தில், என் கண்களில் நான் காணும் கனவுகள் எல்லாம் கண்ணீர் துளிகளால் மறைக்கப்பட்டிருக்காது.
ஆனால், காலத்தை திருப்ப அந்தக் கடவுளாலும் முடியாது. இருப்பினும் அவனிடம் தவறாமல் வேண்டுகிறேன், எல்லாம் என் சுயநலத்திற்காகவே.
ஏனென்றால், கடவுளைப் போல காலத்தைத் திருப்ப முடியாமல் நிற்கதியில் இருக்கும் மருத்துவர்கள் முன்னால், “நீ யாரடா கடவுள், எனக்கு வரத்தை நானே தருகிறேன்!” என்று நீ சொல்ல வேண்டும்.
ஆனால், எத்தனை காலம்தான் போரிடுவாய்? கையில் வைத்திருக்கும் வாளை கீழே போட்டு, எதிர்வரும் படையை வெல்ல விடலாமே? ஒருமுறை தோல்வியை ஒத்துக் கொள்ளலாமே? சில நேரங்களில் தோல்வியும் வெற்றி தானே?
இல்லாமல் போனால் உன்னுள்ளே இருப்பதும் இல்லாமல் ஆகிவிடும் அல்லவா? எல்லாம் ஒரு நொடியில் மாறி விடும் அல்லவா?
இல்லை! தவறு! என்ன வார்த்தை சொல்லிவிட்டேன்! மன்னித்துவிடு என்னை!
நீ போரிடு! உன்னருகே நான் இருக்கிறேன்.
வீசப்படும் வாள் ஒன்று முதலில் என்னை கிழிக்கட்டும். எத்தனை வந்தாலும் சரி!
இந்த பூமியே ரத்த வெள்ளத்தில் மூழ்கட்டும்! அது உன்னை தாக்க வரும் படைகளின் குருதியாக இருக்கட்டும்!
எடு உன் வாளை. நான் உன் கேடயம். உன்னை நான் பாதுகாக்கிறேன்.
என்ன நேரம் இப்பொழுது? வெளியிலே வெளிச்சம் வந்துவிட்டதால் இதை பகலாக எண்ணிக் கொள்கிறேன்.
உன் கண்களை திறந்து விட்டாய். போருக்கு தயாராகி விட்டாய்.
எத்தனை முறை வாழ்க்கை உன்னை கீழே தள்ளியும் நீ எழுந்து கொண்டே இருக்கிறாய்.
அப்பொழுது… தோற்பது யார்? நீயா…? அல்லது இந்த வாழ்க்கையா…?
Loved it? Why not share it?